Wednesday, March 20, 2019

வேலை

இளைஞர்களுக்கு
அதிக வேலைப் பளுவே பிரச்னையாக மாறியுள்ளது. நல்ல வேலை... கை நிறைய சம்பளம் கிடைத்தும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வேலை செய்ய உடல் ஒத்துழைக்கவில்லையே என்ற கவலை இன்றைய இளைய தலைமுறையினரை தாக்கி வருகிறது. காரணம் பத்து மணிநேரத்திற்கு மேல் பார்க்கும் வேலைப்பளுதான்.

வேலைப்பளுவிற்கு பயந்து வேலையை விட முடியாது. இன்றைய கால கட்டத்தில் மனதிற்கு பிடித்த வேலை கிடைப்பது அத்தனை எளிதல்ல.
ஆசை ஆசையாய் வேலைக்குச் சேர்ந்த சில வருடங்களில் ஆழ்ந்த மனச்சோர்வுக்கு உள்ளாகிறார்கள் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதீத வேலையால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் க்ரோனிக் பேட்டிக் சிண்ட்ரோம்' (Chronic fatigue syndrome)போன்றவையும் ஏற்படுவது தெரியவந்துள்ளது.
நமது உடலில் சாதாரணமாக களைப்பு அல்லது சோர்வு உடலில் இருந்தால் போதிய ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும். ஆனால் தற்போது எத்தனை மணி நேரம் ஓய்வெடுத்தாலும் உடலில் சோர்வு இருந்துகொண்டே இருக்கும். இதனால் வேலையில் முழுமையான கவனத்துடன் ஈடுபட முடியாது. இதைத்தான் க்ரோனிக் பேட்டிக் சிண்ட்ரோம் என்கின்றனர். இந்தப் பிரச்னையை நீண்டகாலமாக உடலில் இருக்கும் களைப்பு என சுருக்கமாகச் சொல்லலாம். அவ்வளவு எளிதில் நீங்காத களைப்பு. இந்த களைப்பு ஏன் வருகிறது? இதைப் போக்க என்ன வழி என்பதை தெரிந்து கொள்வோம்.

மன அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாதவர்களுக்கும் பேட்டிக்சிண்ட்ரோம் ஏற்படுவதாக சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன. முன்பெல்லாம் வெளிநாடுகளில் மட்டும்தான் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு வந்தார்கள். அதிலும் 40 முதல் 50 வயது உள்ளவர்கள்தான் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர். இப்போது இந்தியாவில் உள்ள இளைய தலைமுறையினர்தான் பேட்டிக் சிண்ட்ரோம் பிரச்னைக்கு உள்ளாகிறார்கள்.

வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு சில மாதங்கள் உடல் வலியுடன் முதுகுவலி, தொண்டைவலி, நீணநீர் நாளங்கள் பெரிதாதல் ஆகிய பிரச்னைகளும் சேர்ந்து இருக்கும். தூக்கம் சரியாக வராது. மருந்து, மாத்திரைகளுக்கும் இந்தப் பிரச்னையை உடனடியாகத் தீர்க்காது. இப்போது மிகுவேலையின் காரணமாக ஏற்படும் மனச்சோர்வையும் 'க்ரோனிக் பேட்டிக் சிண்ட்ரோம்' என சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். இந்த இரண்டும் வேறு வேறு என புரிந்து கொள்ளவேண்டும்.


வேலையால் ஏற்படும் மனஅழுத்தம் அல்லது சோர்வைச் சரிசெய்வது எளிதாகும். பேட்டிக் சிண்ட்ரத்தில் உள்ள அறிகுறிகள் மிகுவேலையால் வரும் சோர்விலும் இருக்கும். வேலை எதுவும் செய்யாத இளைஞர்களுக்கும் இத்தகைய தீராத களைப்பு தற்போது உடலில் வருகிறது. சில வருடங்கள் மூளையைப் பயன்படுத்தி செய்யும் வேலைகளைத் தொடர்ந்து கார்ப்பரேட் நிறுவனங்களில் செய்யும் இளைஞர்கள் எந்த வேலையும் செய்ய முடியாதபடி ஆகிவிடுவார்கள்.
இத்தகைய இளைஞர்கள் ஒரு கட்டத்தில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் இருப்பார்கள். ஆழ்ந்த மனச்சோர்வில் வேறு நிறுவனத்தில் வேலைக்கு போகக்கூட பயப்படுவார்கள். உடலில் கழுத்துவலி, முதுகுவலி, உடல்சோர்வு போன்றவை இருக்கும். இதையும் க்ரோனிக் பேட்டிக் சிண்ட்ரோம் என சொல்பவர்கள் அதிகம். ஆனால் இதன் பெயர் `பர்ன் அவுட் சிண்ட்ரோம்' (Burnout syndrome).

அளவுக்கு மீறிய வேலைகளை பல மணி நேரங்கள் குறைந்த வருடங்களில் செய்வதால் வரும் பிரச்னை இது. மனரீதியாக புதிய யோசனைகள் தீர்ந்துபோனவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் படைப்புரீதியாக எந்த புதிய யோசனையும் இல்லாமல் போய்விடும். 11 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை தொடர்ந்து மென்பொருள் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கும், இணையத்தைப் பயன்படுத்தி வேலை செய்பவர்களும் மிகுந்த மனச்சோர்வை அடைகிறார்கள்.

சம்பளம் அதிகம் என்பதால் பலரும் இதைப் பொருட்படுத்துவது இல்லை. இவர்கள் வேலை நேரத்தை கொஞ்சம் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். மூன்று மணிநேர சினிமாவிற்கே அரைமணி நேரம் இடைவெளி விடும் போது 10 மணிநேர வேலை செய்பவர்கள் அவ்வப்போது இடைவெளி விட வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுறுத்தலாகும்.

உடல்ரீதியாக தீராத களைப்பு வருகிறது எனில் எதனால் பிரச்னை வருகிறது? என காரணத்தைக் கண்டுபிடித்து உடனடியாக அதற்கான சிகிச்சையையும் எடுத்துக் கொள்வது நல்லது. எந்தப் பிரச்னை என்றாலும் மேலதிகாரிகளிடம் பேசி உடனடியாக சரி செய்துகொள்ள வேண்டும். உடல்ரீதியான மருத்துவப் பரிசோதனைகளையும் தகுந்த இடைவேளையில் செய்துகொள்வதும் அவசியம் என்பது நிபுணர்களின் அறிவுறுத்தலாகும்.


இளைஞர்களுக்கு இளம் வயதில் நீரிழிவு பிரச்னையும், உயர் ரத்த அழுத்தமும் வருவதால் இரண்டையும் சரியான அளவில் உள்ளதா என்பதையும் பரிசோதனையையும் தேவையானபோது எடுத்துக் கொள்வது நல்லது. இந்தப் பிரச்னை உடையவர்கள் வேலைக்கு கொஞ்சம் விடுமுறை எடுத்துக்கொண்டு தங்களை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அப்படியும் அந்த வேலை சரிவரவில்லையெனில் அதை விட்டு தங்களுக்குப் பிடித்த வேறு வேலைகளுக்கு மாறிக்கொள்வது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.




வேலைக்கான நேரத்தையும், குடும்பத்துக்கான நேரத்தையும் சரியாக பிரித்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எட்டு மணிநேர தூக்கமும், முறையான உடற்பயிற்சியும் உடலுக்கு அவசியம். இரண்டையும் அன்றாடம் வழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும் என்பது மனநல மருத்துவர்களின் அறிவுரையாகும்.
வழக்கத்துக்கு அதிகமான நேரங்கள் நிறுவனமானது வேலைவாங்கி அவர்களின் படைப்புத்திறன் அத்தனையையும் மழுங்கடித்து விடும். கற்பனை வளம் தீர்ந்து போனால் கவனச் சிதறல், உடல் சோர்வு மனச்சோர்வும் ஏற்படுகிறது. இப்படி இருப்பவர்கள் வேலைக்கு சென்றாலும் அதில் கவனத்தைச் செலுத்த முடியாமல் திண்டாடுவார்கள்.

இதுபோன்ற பாதிப்புக்கு ஆளானவர்கள் தகவல் தொடர்பில்லாத காடுகளில் அல்லது மலைவாழிடங்களில் நடக்கும் சிறப்பு முகாம்களில் பங்கேற்கலாம். அப்படி செல்ல விருப்பம் இல்லாதவர்கள் இணைய தொடர்புகள் எதுவும் இல்லாத, செல்போன் பயன்படுத்த முடியாத மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்லலாம். யோகா, தியானம் என இயற்கை சூழ்நிலைகளில் சொல்லிக்கொடுக்கும் இடத்திற்கு செல்லலாம். இதன் மூலம் மனமும் அமைதியாகி, உடலுக்குப் போதுமான சக்தியும் கிடைக்கிறது. அதன்பிறகு வேலைக்குத் திரும்பினால்கூட அடுத்த ஆறு மாதம் வரை உற்சாகமாக வேலை செய்வார்கள்.

உடலில் ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்யும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் சி சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதும். சுத்தமான தேன் எடுத்துக்கொள்வதும் சோர்வை போக்கும். உருளைக்கிழங்கை வாரத்திற்கு இருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள உயர்தர பொட்டாசியம் உடலுக்கும், மனதிற்கும் உற்சாகம் தரும். அப்பப்ப பேட்ரி லோ ஆகுதா? வேலையை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு உற்சாகமாக பாட்டு கேளுங்க... மனசுக்கு பிடிச்சவங்களோட பேசுங்க என்பதும் நிபுணர்களின் அறிவுரையாகும

இந்தியாவில், வேலையின்போது ஏற்படும் மன உளைச்சல், கடும் போட்டியை சமாளிக்க முடியாமல் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக பக்கவாதத்திற்கு முக்கிய காரணமாக அமைவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2015ம் ஆண்டுக்குள் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு பக்கவாதம் ஏற்படுவது30 சதவீதம் அதிகரிக்கும். இவர்களின் எண்ணிக்கை 17 லட்சமாக உயரும் என்றும் அது தெரிவிக்கிறது.

இது மட்டுமல்லாமல்,இந்தியாவில் தற்போது 40 வயதுக்குட்பட்டோருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்படுவது கிட்டத்தட்ட 15 முதல் 30 சதவீதமாக இருப்பதாகவும் தெரிவிக்கிறது இந்த அறிக்கை.

No comments:

Post a Comment

வேலை

இளைஞர்களுக்கு அதிக வேலைப் பளுவே பிரச்னையாக மாறியுள்ளது. நல்ல வேலை... கை நிறைய சம்பளம் கிடைத்தும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வேலை ...